டெல்லி :
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும் மைன்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCA) இதுவரை விண்ணப்பித்தவர்களில் மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 
உலகளவில் 89 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பேரின் ஆய்வுகள் மனிதர்களிடையே இந்த மருந்தை சோதனை செய்யும் அடுத்த கட்டத்திற்கு (Clinical Trial) தேர்வாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சியில் அவர்களுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது, உலகளவில் இதுபோன்ற ஏழு கூட்டுமுயற்சிகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஹாமில்டனில் உள்ள ராக்கி மவுண்டன் ஆய்வக விஞ்ஞானிகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசிகளை ஆறு ‘ரீசஸ் குரங்கு’களுக்கு செலுத்தி சோதனை செய்தனர், 28 நாட்களுக்குப் பிறகும் எந்தவகையான கொரோனா வைரசும் இவைகளை தாக்கவில்லை என்றும் அவைகள் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆக்ஸ்போர்டில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் அட்ரியன் ஹில் தலைமையிலான குழுவும் ஏப்ரல் 23 ஆம் தேதி தடுப்பூசி மூலம் மனித சோதனைகளைத் தொடங்கியுள்ளது. விலங்குகளில் நடத்தப்படும் இந்த சோதனைகளின் வெற்றி நிச்சயமாக, மனிதர்களுடனான சோதனைகளும் வெற்றிபெறும் என்று கூறமுடியாது.
சோதனைக்கு உட்பட்ட கோவிட் -19 தடுப்பூசிக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்குள் இந்த மருந்தினை மனித பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சோதனைகளை மேற்கொண்டு வரும் அதே வேளையில், இந்தியாவில் தனது தடுப்பூசி உற்பத்தியையும் தொடங்கப்போவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார்.
ஆய்வின் முடிவுகள் தெளிவாக வரும் முன்னரே, இதுபோன்ற தயாரிப்புகளில் ஈடுபடும் இந்த நிறுவனம், இவற்றை இந்தியர்களிடம் சோதனை செய்து பார்க்கவும், அதன் பின் வெளிநாடுகளில் விற்று பணமாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உலகம் ஒற்றை தலைமையின் கீழ் இயங்கிய நேரத்தில் சோதனை கூடமாக விளங்கிய இந்தியா, தற்போது உலகம் பலமுனை சிக்கலில் உள்ள போதும் இந்தியா என்பது சோதனை கூடமாகவே இருப்பது, இந்தியா எந்த நாளிலும் தன்னிச்சையாக தனது மக்கள் நலன் கருதி முடிவெடுக்க முடியாது என்பது போல் உள்ளது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
நோய்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளில் குறைந்து வரும் வேளையில் இந்தியாவில் அவர்கள் மனிதர்கள் மீது பரிசோதனை செய்வர் என்று கூறியது இந்த வீடியோ பதிவில் நமக்குத் தெரிகிறது.