நியூயார்க்

கொரோனா தாக்குதலால் உலகாளவில் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அச்சம்  தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன.  பல தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.  குறிப்பாக தினக் கூலி பெறும் தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அமைப்பின் தலைவர் கெய் ரைடர், “உலக அளவில் 43 கோடி சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கோரோனா பரவுதலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளன.  உலக அளவில் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.   அவர்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 160 கோடி பேர் ஆவார்கள்.  கிட்டத்தட்டப் பாதிப்பேர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆவார்கள்.

கொரோனா பாதிப்பால் இவர்கள் வேலை இழந்துள்ளனர்.  இதனால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ளனர்.   குறிப்பாக அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்காவில் இத்தகைய தொழிலாளர்களில் 80%க்கும் அதிகமானோர் பணி இழந்துள்ளனர்.   இந்த தொழிலாளர்கள் பணி இழப்பு அவர்கள் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளதரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும்

எனவே உலக நாடுகள் அனைத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காக்க தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.  இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை  மட்டுமின்றி அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சியில் இருந்து காக்கும் முயற்சியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.