வாஷிங்டன்: கொரோனா பரவலின் விளைவால், உலகளவில் மொத்தம் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி.
இதுகுறித்து, உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில், 6 கோடிக்கும் அதிகமானோர் கடும் வறுமைக்கு தள்ளப்படுவர். இது, வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, உலக வங்கி, நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த வகையில், 100 வளரும் நாடுகளுக்கு அடுத்த 15 மாதங்களில் ரூ.12 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும்.
இந்நாடுகளில், உலக மக்கள் தொகையில் 70% பேர் வசிக்கின்றனர். மொத்த நிதி உதவியில் மூன்றில் ஒரு பங்கு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன், சாத், ஹைதி, நைஜர் உள்ளிட்ட நாடுகளுக்கு தரப்படும். வளரும் நாடுகள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் முக்கிய நோக்கம்.
இதுமட்டுமின்றி, ஏழைகளுக்கு ரொக்க உதவி, போதிய சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, தனியார் துறையை பாதிப்பில் இருந்து காப்பது, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றுக்கும் உலக வங்கி முக்கியத்துவம் அளிக்கிறது” என்றார்.