வாஷிங்டன்
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது.
சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்த வைரஸ் தொற்று சீனா முழுவதும் பரவியது. இதனால் சீனாவின் பல நகரங்களுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின
உலகின் பல நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதால் அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதையொட்டி நேற்று உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அபனோம் ஒரு அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு டெட்ரோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ளது. சீனாவில் ஒரே நாளில் இந்த வைரஸ் பாதிப்பால் 38 பேர் மரணமடைந்தது அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து உணர் வைத்துள்ளது. சீனாவைத் தவிர மற்ற பல நாடுகளிலும் தற்போது இந்த வைரஸ் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் வெளி வந்துள்ளது.
இதுவரை நான்கு நாடுகளில் இந்த வைரஸ் தொற்று மனிதருக்கு மனிதர் பரவி உள்ளது. ஆயினும் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் மரணம் உண்டாகவில்லை என்பது சற்றே சமாதானம் அளிக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பலவீனமான சுகாதார அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் மிக விரைவில் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இது தொடர்பாக உதவ இப்போது இருந்தே துணிவுடன் செயல்பட வேண்டும். சீனாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதால் உலகளாவிய மருத்துவ அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்குச் சினாவில் என்ன நடக்கிறது என்பது மட்டுமின்றி மற்ற நாடுகளில் என்னென்ன நடக்கிறது என்பதும் முக்கிய காரணம் ஆகும். சீனா கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் என இந்த மையம் நம்பிக்கை கொண்டுள்ளது. விரைவில் இந்த விவகாரம் குறித்து ஐநா உறுப்பு நாடுகளுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச விமானச் சேவைகளை ரத்து செய்ய தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம் ஆயினும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க நாட்டின் எல்லைகளை மூடுவது மற்றும் விமானச் சேவைகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நாடுகள் முடிவு எடுக்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.