டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 5ம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை அரசு நாடியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 180 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் 35 வயதான நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இவருக்கு எந்தவித பயணத் தொடர்பும் இல்லாத சூழலில், காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அதுபோல  கர்நாடக மாநிலம் தும்கூருவை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் ரயில் மூலம் டெல்லி சென்று திரும்பியிருந்தார். இவருடன் பயணித்த நபர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விசாகப்பட்டினத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் நாக்பூரை சேர்ந்தவர்கள். ஒருவர் கொண்டியாவை சேர்ந்தவர்.

பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பியுள்ளார். மற்றொருவர் நாளந்தாவை சேர்ந்தவர். இவரும் வெளிநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு700ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.