லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்பது அனைத்து மக்களுக்கும் அவசியப்படாத ஒன்று கூறியுள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா.
உலகில், கொரோனா பரவலுக்கு எதிரான ஊரடங்கு நடவடிக்கைகளை அவர் கடுமையாக எதிர்ப்பவர். எனவே, அவருக்கு ‘மறுதிறப்பு பேராசிரியர்’ என்ற பட்டப்பெயரும் உண்டு.
அவர் கூறியுள்ளதாவது, “தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி, கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அனைவருக்கும் தேவையில்லாத ஒன்று.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சுவாசம் தொடர்பான கோளாறுகளால் அவதிப்படுவோர், வேறுபல முக்கியமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குதான் அந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.
மற்றபடி, இளைய தலைமுறையினர் மற்றும் வேறு எந்தவித உடல் நோய்களாலும் பாதிக்கப்பட்டிராதவர்கள் இந்த கொரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு சாதாரண ஃப்ளூ என்பது எப்படியோ, அப்படித்தான் கொரோனாவும்.
இந்தக் கொரோனா நோய் என்பது படிப்படியாக வலுவிழந்து, காலப்போக்கில் ஒரு சாதாரண காய்ச்சல் என்றளவில் வலிமை குன்றிவிடும்” என்றுள்ளார் அவர்.