டில்லி
கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் மும்முரமாக இறங்கி உள்ளன. இவ்வகையில் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் இணைந்து புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. ஊசி மூலம் செலுத்தக் கூடிய இந்த மருந்து குறித்த சோதனைகள் நடைபெற உள்ளன.
இந்த பரிசோதனைக்காக இந்தியாவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யபட்டுளன. இவற்றில் ஒன்று சென்னை அருகே உள்ள காட்டங்கொளத்தூரில் அமைந்துள்ளது. இதைத் தவிர, விசாகப்பட்டினம், ரோடக், டில்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர், மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் சோதனை நடக்க உள்ளது.
இந்த மருத்துவமனைகள் இந்த சோதனை தொடங்க தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவித்துள்ளது. இந்த சோதனைகளை விரைவு படுத்தி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சிகிச்சையைத் தொடங்க ஐ சி எம் ஆர் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்குப் பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐ சி எம் ஆர் அளித்துள்ள விளக்க அறிக்கையில், “கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்பு முக்கியம் என்பதில் எவ்வித சமரசமும் கிடையாது. இதற்கான சோதனைகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளின் படியே நடக்கும் என உறுதி அளிக்கிறோம். இந்த விதிமுறைப்படி விலங்குகள், மனிதர்கள் ஆகியோரிடம் சோதனை நடக்கும்.” எனக் கூறப்பட்டுள்ளது.