டில்லி
கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட பிரிவினரை விட அனைவருக்கும் அவசியம் போட வேண்டும் என செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை தடுக்க இந்திய அரசு கோவி ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்து கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் போடப்படுகிறது. இதில் முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது கடந்த மார்ச் 1 முதல் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோய்கள் உள்ளோருக்கும் போடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அதிகமானோர் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. இதற்கு மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் நிலவுவதே காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி (சிசிஎம்பி) அமைப்பின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா, “இந்தியாவில் இதுவரை 4 கோடி பேருக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதை ஒரு சோதனை என எடுத்துக் கொண்டால் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விஸ்தரிக்க வேண்டும். இதை மருத்துவமனைகள் இல்லாத இடங்களிலும் போட வேண்டும்.
குறிப்பிட்ட வயதுப் பிரிவினர் மட்டுமின்றி அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் ஆகும். eனவே தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்து கைவசம் இருக்கும் என்றால் மற்ற வயதினரும் கொரோனா தடுப்பூசி போஒட்டுக் கொள்ள வந்தால் அவர்களுக்கும் போட வேண்டும். இதன் மூலம் கொரோனா தடுப்புசிகள் வீணாகமல் தடுக்கப்படும்.
தற்போது கொரோனா தடுப்பூசிகள் வீணாவதாக வரும் செய்திகளை மனதில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் மத்தியில் இந்த தடுப்பூசி எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது என்பது பரவ தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும்.
இந்த கொரோனா தடுப்பூசி எத்தனை நாட்களுக்கு வீரியத்துடன் இருக்கும் என்பது தெரியாத நிலையில் இது ஐந்து வருடங்களுக்காவது செயல்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அனைவருக்குக் கொரோனா பரவலை தடுப்பதில் சமூக பொறுப்பு இருப்பதை புரிய வைக்க வேண்டும். இல்லை எனில் மற்றொரு ஊரடங்கு அமலாவதை யாரும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.