சென்னை: நேற்று மாலை  சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் களத்தில் இறங்கி பணியாற்றியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் 3ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், நேற்று மாலை, புனேவில் இருந்து 52 பெட்டிகள் அடங்கிய 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விரைந்து வந்த அமைச்சர், உடனே தடுப்பூசிகளை பிரித்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து இரவோடு இரவாக, தடுப்பூசிகள் மாநிலத்தில் உள்ள 45 தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு மருந்துகள், மாவட்ட மையங்களுக்கு கிடைத்து விட்டதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது இதுகுறித்த பட்டியலையும் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி மருந்துகள் 45 வயதிற்க்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வந்த சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் நேற்றிரவு மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கும் பணி நடைபெற்றது என தெரிவித்து உள்ளார்.