டில்லி
மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
உலக அளவில் இந்தியா தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 2,74,944 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 1,50,57,767 பேர் பாதிக்கப்பட்டு 1,78,793 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,29,48,848 பேர் குணம் அடைந்து தற்போது 19,23,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல் கட்டத்தில் கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன0
கொரோனா பரவலையொட்டி அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டை கடுமையாக்கி உள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்படையலாம் என அச்சம் எழுந்தது. இது குறித்து மத்திய அரசு சுகாதாரத்துறைச் செயலர் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் ”கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதில் இதுவரை 12 கோடியே 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த போதிலும், கொரோனா தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது
அது மட்டுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்தும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு மருத்துவமனையிலிருந்து கொரோனா பரவாமல் இருக்க, மருத்துவமனையில் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்க வேண்டும். அதிகாரிகள் அதை அவசியம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.