சென்னை: கெரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் முகாம் இனிமேல் வாரத்தின் சனிக்கிழமை தோறுங்ம சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று ஒரே நாளில்  2000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள் விளையாட்டரங் கில் இன்று காலையில் தொடங்கியது. முகாமை தொடங்கி வைத்து பேசிய  சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,

இனிமேல், சென்னையில் வாரந்தோறும் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும்,  சென்னையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் என 45நாள்களில் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன்,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 160 மாநகர சுகாதார மையங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மருத்துவமனை செல்ல இயலாத வயது முதிர்ந்த நபர்களை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 50 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி, கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர், சென்னையில்  நேற்று வரை 4.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும், சென்னை  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும்  கொரோனா சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று  கூறிய அவர்,  பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால் கொரோனாவை 100% கட்டுப்படுத்த முடியும் என கூறினார்.