சென்னை:

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார்  3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ  காலி பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, 530 மருத்துவர்கள் மற்றும் 1000 செவிலியர்கள் 1,508 ஆய்வக நுட்புனர்கள் (Lab Technician), உள்பட 3038 பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவிடப்பட்டுஉள்ளது. இவர்கள் 3 நாளில் பணியில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,

தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 1,508 ஆய்வக நுட்புனர்கள் (Lab Technician), 530 மருத்துவர்கள் மற்றும் 1000 செவிலியர்கள் ஆகியோரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப்பட்டவுடன் 3 தினங்களுக்குள் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர கால ஊர்திகளை (Ambulance) உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.