டில்லி

ற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவால் கொரோனா தொற்று மிகவும் அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வருடம் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.   12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா இந்தியாவில் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் நடைபெறுவது வழக்கமாகும்.  இதில் ஹரித்வாரில் மிகவும் விசேஷமாக விழா நடக்கும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வாரில் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த விழா நடைபெறுகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்த விழாவை ஏப்ரல் 1 முதல் 30 வரை நடத்த மட்டும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.   கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் உள்ளோர் மட்டுமே நகரில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆயினும் ஹரித்வார்,  ரிஷிகேஷ் போன்ற நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன.  இதையொட்டி நேற்று முன் தினம் மத்திய அரசு செயலர் மட்ட அதிகாரிகள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.   அப்போது கும்பமேளா விழாவால் கொரொனா தொற்று மிகமிக அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பமேளா விழாவைத் திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்காவிடில் கொரோனா தொற்று சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.  ஆனால் அரசு தரப்பில் இந்த விழாவை விரைவில் முடிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.   எனவே மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடு விதிகளை மேலும் கடுமையாக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.