டில்லி

கொரோனா தொற்று எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் எனத் தொற்று நோய் நிபுணரான கிரிதர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  அடுத்த இடங்களில் குஜராத், தமிழகம், டில்லி என உள்ளன,   குறிப்பாகத் தமிழகம் சில தினங்களாக இரண்டாம் இடத்தில் இருந்த போது குஜராத் மாநிலத்தில் திடீர் எனப் பாதிப்பு அதிகரித்து இரண்டாம் இடத்தை பிடித்தது.

இது குறித்து தொற்று நோய் நிபுணர் கிரிதர் பாபு, “நமது நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாட்டுக்குச் சமம் ஆகும்.  எனவே கொரோனா தொற்று ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது.  வரும காலங்களில் மற்ற மாநிலங்களில் அதிக அளவில் பரவலாம்.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா கொரோனா தடுப்பு நட்வ்சடிக்கைகளை திறம்பட நடத்தி வருகிறது.   ஆனால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவில்லை.  இதனால் நாம் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம்.  கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.  ஆனால் மீண்டும் அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவேண்டும்.   பாதிப்பு இல்லாத சில மாவட்டங்களில் திடீர் என வைரஸ் தொற்று அதிகரிக்கக் கூடும்  இதற்கு உதாரணமாகக் கர்நாடக மாநிலத்தில் தாவண்கரே மற்றும் சித்ரதுர்கா மாவ்வடஙக்ளை கூறலாம்.  இங்கு முழுவதுமாக கொரொனா தொற்று இல்லாமல் இருந்து மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.  நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக மாவட்ட அளவில்  பணிகள் நடப்பதைப் போல் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே கொரோனாவை முழுமையாகத் தடுக்கும் இலக்கை அடைய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.