சென்னை: சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 1.7சதவிதமாக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் சென்றுள்ளது. அந்த வகையில் நேற்று 589 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 770 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 147 பேரும், கோவையில் 88 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 940 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு நேற்று மட்டும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில், அரசு மருத்துவ மனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் அடங்குவர்.
சென்னையில் நேற்று 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2,29,074 ஆக உயர்நதுள்ளது. நேற்று மட்டும் 3 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழப்பு 4,065 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, நேற்று 147 பேர் குணம் அடைந்து, இதுவரை மொத்தம் 2,23,050 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,959 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
சென்னை மண்டலத்தில் கொரோனா பெருந்தொற்று நோயின் பரவலும், பாதிப்பும் குறைந்திருந்தது. தற்போது அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற பகுதிகளில் மட்டும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறதென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கொரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 9ஆயிரத்து 629 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 164 நபர்களுக்கு மட்டுமே கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் கிட்டத்தட்ட 1.7ஆக குறைந்துள்ளது.
மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவரின் பட்டியல் :-
அண்ணா நகர் – 25161 பேர்
கோடம்பாக்கம் – 24764 பேர்
தேனாம்பேட்டை – 21924 பேர்
ராயபுரம் – 20008 பேர்
தண்டையார்பேட்டை – 17439 பேர்
திரு.வி.க.நகர் – 18230 பேர்
அடையாறு – 18585 பேர்
அம்பத்தூர் – 16209 பேர்
வளசரவாக்கம் – 14540 பேர்
ஆலந்தூர் – 9500 பேர்
மாதவரம் – 8243 பேர்
பெருங்குடி – 8499 பேர்
திருவொற்றியூர் – 6902 பேர்
சோழிங்கநல்லூர் – 6113 பேர்
மணலி – 3632 பேர்