சென்னை:
முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7,466 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 7000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 14,38,509 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதை ஒட்டி தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னும் நாட்கள் அதிகரித்தால் அது மேலும் கட்டுக்குள் வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.