டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், பெரும்பாலான சிறப்பு ரயில் சேவைகளை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தொற்று மீண்டும் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,46,081- ஆக அதிகரித்துள்ளது. அதுபோல நேற்று மட்டும் 212 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,59,967-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,11,51,468 – பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தாலும், தற்போதைய நிலையில், 3,34,646- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முடக்கப்பட்ட ரயில்சேவை, தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, படிப்படியாக இயக்கப்பட்டுவந்தது. சிறப்பு ரயில்கள் மற்றும் புறநகர், மெட்ரோ ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முழுமையாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் முதல் அனைத்து ரயில் சேவைகளும் பழைய முறைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஏப்ரல் மாதம் முதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து ரயில்களையும் விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கி யுள்ளது. இதனால் பல இடங்களில் மீண்டும் பகுதி நேரம், இரவு நேரம் ஊடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு ஓடும் ரயில்கள் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தேவைப்பட்டால் பல ரயில்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.