சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழகத்தில் தொற்றுபரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகமாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்த மாதம் (மார்ச்) தொடக்கத்திலிருந்து தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று (மார்ச் 22) மட்டும் 1,385 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள சாலையோர உணவகங்களில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் உணவு வாங்க வரும்போது முகக்கவசம் அணிந்து வரவும், உணவு சாப்பிடும் போது சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது. கொளத்தூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் நோய் பரவாததால், கொரோனா தொற்று இல்லை என மக்கள் நினைக்கின்றனர். பிப்ரவரி மாதம் வரை குறைந்துதான் இருந்தது. ஆனால், தற்போது 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், இருவருக்குத்தான் தொற்று வருகிறது.
இதற்கு பொதுமக்கள் நிலையான வழிமுறைகளை பின்பற்றாதது ஒரு காரணம் என்றவர், பொதுமக்கள் எச்சரிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இருக்க வேண்டும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.