பதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 91 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது,
புதுவை மாநிலத்தில் நேற்று  521 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில், புதுச்சேரியில் 90 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் என மொத்தம் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில்  66 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 24 பேர் ஜிப்மரிலும், ஒருவர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார்.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,318 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில்,  831 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில், இதுவரை 31,947 பேரை பரிசோதித்ததில் 29,495 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 134 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.