டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைவயில் நாளை காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி அனுப்பப்படுவதில் மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு பாக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக ராகுல், சோனியா உள்பட பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளன. இதுமட்டுமின்றி, தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து, மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில் நாளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை (17ந்தேதி) காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.
செயற்குழு கூட்டத்தில் கொரோனாவில் சிக்கி தவிக்கும் நாட்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், மீண்டும் பொருளாதார முடக்கம் ஏற்படாதவாறு லாக்டவுன் நடவடிக்கை, கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு, தேவையான அளவு தடுப்பூசி தயாரிப்பு மற்றும் இறக்குமதி போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.