பாரிஸ்

ரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

கொரோனா தொற்று சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்தது.  இதையொட்டி ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் பிறகு பாதிப்பு ஒரே நிலைக்கு வந்தது.   தற்போது இந்நாடுகளில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கி உள்ளது.  இங்குள்ள அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

இங்கிலாந்து நாட்டில் சென்ற மாதம் மூன்றாம் வாரம் தினசரி 3 முதல் 4 ஆயிரம் பேருக்குப் பாதிப்புக்கள் இருந்தன.   தற்போது தினசரி 20000 பேர் வரை பாதிப்பு உறுதி ஆகிறது.   இங்கிலாந்தில் கிரேட் மான்செஸ்டர், சவுத் யார்க்‌ஷையர், லன்காஷையர், மற்றும் லிவர்பூல் பகுதியில் மிக அதிகமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   வேல்ஸ் பகுதி தனித்ஹ்டு விடப்பட்டது. ஸ்காட்லாந்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  வடக்கு அயர்லாந்தில் 4 வார ஊரடங்கு அமலில் உள்ளது.

ஜெர்மனி  அதிபர் ஆஞ்செலா மார்கெல் தனது நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் கட்டுப்பாடுகள் இழந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.   தனது கட்சியினரிடம் தற்போதைய சூழ்நிலை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் செல்வதே கடினமாக உள்ளதாகவும் கூறி உள்ளார்.   வரும் மாதங்கள் மேலும் கடுமையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.   சென்ற மாதம் தினசரி சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 15000 ஐ நெருங்கி உள்ளது.

பெல்ஜியம் நாட்டில் தொற்று அதிகரித்து வருவதால் அவசர சிகிச்சைப்பிரிவுகள் நிரம்பி வழிகின்றன.   ஒரே நாளில் 2000 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17700 ஐ நெருக்கி உள்ளது.   நேற்று முன் தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அக்டோபர் 25 முதல் புதிய அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.  இதன் மூலம் நாட்டின் உள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.   இரவு நேரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இங்கு கடந்த 22 மற்றும் 23 தேதிகளில் தினசரி பாதிப்பு 19000 ஐ கடந்துள்ளது.

இத்தாலி நாட்டிலும் அக்டோபர் 25 முதல் நாடெங்கும் கடும் கட்டுப்படு விதிக்கப்பட்டுள்ளன.   ஏற்கனவே திறக்கப்பட்ட திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மீண்டும் மூடப்பட்டுள்ளன.   முன்பு தினசரி 3000 பாதிப்பு இருந்த நிலையில் தற்போது  20000 ஆகப் பாதிப்பு அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது.  ஆனால் அதிகாரப் பூர்வமாக அதில் பாதி மட்டுமே அறிவிக்கப்படுகிறது.   எனவே இந்நாட்டில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளன..   மேலும் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட பிரான்சில் இறப்பு எண்ணிக்கையும் அதிகம் என கூறப்படுகிறது   பாரிஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரவு நேர ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.