டெல்லி: இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை அதிகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை நெருக்கி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சம் பெற்றுள்ளது. இது 2வது கட்ட அலை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட சுகாதார நிபுணர்கள் கூறி உள்ளனர். தினசரி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால், உலக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, கொரோனா சோதனை 5 கோடியை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி, 4 கோடியே 95 லட்சத்து 51 ஆயிரத்து 507- சளி மாதிரிகள் கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 லட்சத்து 20 ஆயிரத்து 362 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 85,974 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 52,98,508 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.