கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
ஆகையால், அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க, ஹீலர் பாஸ்கர் என்பவர் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், மக்களை கொல்ல அரசு திட்டமிட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு தான் மற்றுசிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.
பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சிறைக்கு கொண்டு போகப்பட்டார்.