சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, இந்த மாதம் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. தமிழ்கத்தில் தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு வரும் 15-ந்தேதி வரை உள்ளது. இதையடுத்து ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பது, ஞாயிறு தடை நீக்குவது மற்றும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
மேலும், கொரோனா நோய் தொற்று பள்ளிகளுக்கு பரவாமல் இருக்க என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றியும், விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்கள் வருவதாலும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூற்ப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் பொது சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.