சென்னை:
கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  “சென்னை மாநகராட்சி கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பு சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறது. 50வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா பணிக்கு அமர்த்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டும், வயதானவர்களையும், நோயாளிகளையும் கொரோனா பணிக்கு வர கட்டாயப்படுத்துகிறது. அதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலிருந்து, “அனுபவமில்லாத இந்த பணியில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் சிரமத்துக்குள்ளாகினர். எனவே கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு மட்டுமே ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். களத்திற்கு ஆசிரியர்கள் யாரும் அனுப்பப்படுவதில்லை. உரிய பாதுகாப்பு அம்சங்களும், பயிற்சி வழங்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், “ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பொறுப்பு கொண்டவர்கள். பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.