சென்னை: மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து  சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் செப்டம்பர்  1-ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  பள்ளிகள் திறக்கப்பட்டன.  தினமும் 50 சதவீதம் என சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், குறைந்த அளவிலானா மாணவர்களே பள்ளிக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  முதன்முதலாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 2,100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும்,  பண்ருட்டி அருகேஅரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவருக்கு தொற்று ஏற்பட்டது. உய்யகொண்டான் திருமலை பகுதியில்  12-ம் வகுப்பு மாணவிக்கும் தொற்று பரவியது. புதுக்கோட்டை மாவட்டம் முல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு தொற்று பரவியது. கரூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள அந்தப்பள்ளி மூடப்பட்டது. அந்த மாணவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதன்பிறகு அந்த மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,  அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாணவருக்கு தொற்று பரவியதால் அந்த பள்ளிக்கூடம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட  1-ந்தேதி பள்ளி முதல்  இதுவரை 15 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.