101 வது பிறந்த நாளை  மருத்துவமனையில்  கொண்டாடிய கொரோனா நோயாளி..

கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல இடங்களில் நூறு வயதைத் தொட்ட ’பெருசுகள்’ முறியடித்து விட்டனர்.

இந்த பெருசுகள் வரிசையில் ’லேட்டஸ்டாக’ இடம் பிடித்திருப்பவர், அர்ஜுன் கோவிந்த். வயது- 101.

விஷேசம் என்னவென்றால்-

10 ஆயிரத்து 695 உயிர்களை விழுங்கி , இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள,  மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர், இந்த முதியவர் என்பது தான்.

மும்பையில் உள்ள ‘இந்து ஹிரிடே சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே ‘’ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அர்ஜுன் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் உடல் நிலை முழுதாக தேறி விட்டது.

இன்று (புதன்கிழமை) 101 –வது வயதில் அடி எடுத்து வைக்கும் அர்ஜுன் கோவிந்த், தனது  பிறந்த நாளை நேற்று  மருத்துவமனையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 -பா.பாரதி.