சென்னை: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர், மீண்டும் சோதனை செய்துகொள்ளும் வகையில், கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 6ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பும் தினசரி 100ஐ தாண்டி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  பலர் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் ஆளாவதாகவும், மேலும், இருதய பிரச்சனை, சிறுநீரக மற்றும் கல்லீர பிரச்சனைகள், நிமோனியா மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது மருத்துவர்கள்  தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, கொரோனாவிலிருந்து குணமடைந்த பலர் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது சென்னையில்தான்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமடைந்த 8 லட்சம் பேரில், நுரையீரல் பிரச்சனையால் 10 முதல் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர்கள் அனைவரும் இந்த மையத்தில் பரிசோதனை செய்யலாம் என்றும், கொரோனாவிற்கான சிகிச்சையை தமிழகத்தில் உள்ள எந்த மருத்துவமனையில் பெற்றிருந்தாலும்,அவர்கள் சிகிச்சை முடிந்து 4 வாரங்களுக்கு பின்னர் இந்த கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தில் சென்று பரிசோதனை செய்யலாம் என்று கூறியுள்ளார்.

சென்னையை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் அமைக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.