மும்பை

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மிகவும் மலிவான விலையில் வெண்டிலேட்டர்கள் தயாரித்துள்ளதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் செயற்கை சுவாசத்துக்கு உதவும் வெண்டிலேட்டர்கள் தேவை அதிகமாக உள்ளது.  அதன் விலை சுமார் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.   இதனால் பல மருத்துவமனைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்கள் உள்ளன.

பிரபல தொழில் நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா டிராக்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.   இந்த நிறுவன உரிமையாளர் ஆனந்த் மகேந்திரா கடந்த ஞாயிறு அன்று தங்கள் தொழிற்சாலைகளில் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று அந்த நிறுவன நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா, “இரு பெரிய பொதுத் துரை நிறுவனங்களுடன் இணைந்து எங்கள் நிறுவனம் எளிய முறையில் இயங்கும் வெண்டிலேட்டர்களை உருவாக்கி உள்ளது.  இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே வெண்டிலேட்டர்களை உருவாக்கி வருகின்றன.  தற்போது அவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வெண்டிலேட்டர்கள் விலை ரூ,7500க்கும் குறைவாக இருக்கும்.  இந்த வெண்டிலேட்டர்களில் அம்பு பேக் என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் இது மிகவும் எளிமையாகவும் அதே வேளையில் நலல் திறன் கொண்டதாகவும் இருக்கும்.  இன்னும் மூன்று நாட்களில் இதன் மாதிரியைச் சோதனைக்கு அனுப்ப உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.