புதுச்சேரி: மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து புதுச்சேரியில் இன்று (அக்.08) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான மாணாக்கர்களே பள்ளிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் கல்வி போதித்து வருகின்றன.
இதற்கிடையில், பொதுமுடக்கத்தில் இருந்து மத்தியஅரசு அளித்துள்ள தளர்வுகள் காரணமாக, பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதனப்டி இன்று திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 9 வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஷிப்டு முறையில் பாடங்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி,
திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்புகளும்,
செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.
காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1மணிவரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோ பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத சூழ்நிலையில், அரசின் பள்ளி திறக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.