நியூயார்க்: கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது உலக உணவு திட்ட இயக்குனரகம்.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவல் தடுப்பு குறித்து பேசும்போது, பட்டினிச் சாவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதையும் கவனிக்க வேண்டும். கொரோனாவால், உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் முடங்கியுள்ளன. இதனால், அடித்தட்டு மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால், உடல்நலப் பிரச்சினை மட்டுமின்றி, மனிதாபிமான பேரழிவையும் உலக நாடுகள் சந்திக்கும் நிலை உள்ளது. உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில், பஞ்சம் காரணமாக, லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் பசிக் கொடுமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
உலகில் தினமும் 82.10 கோடி பேர், இரவில் உணவு கிடைக்காமல் துாங்கச் செல்கின்றனர். 13 கோடி பேர் மிக மோசமான பட்டினி நிலையில் உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 13.50 கோடி பேர், பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன்மூலம், இந்தாண்டு இறுதிக்குள் பட்டினியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26.50 கோடியாக உயரும் அபாயம் உள்ளது.
அவர்களின் உயிரைக் காப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்த மூன்று மாதங்களில், தினமும் 3 லட்சம் பேர் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்படும். இரண்டாம் உலகப் போருக்குப் பின், மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை, கொரோனா உருவாக்கியுள்ளது. எத்தகைய சவாலையும் சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.