சென்னை: கபசுரகுடிநீர் போன்றவைகளில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பண்டிகை காலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதனால்தான், பொதுமக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கத்தை விழிப்புணர்வு மூலம் உருவாக்கி வருகிறோம். மேலும் அடிக்கடி, கிருமிநாசினி மூலம் கை கழுவ வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து துண்டுகள் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் குடியுங்கள் என்று பிரசாரம் செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைவருமே கபசுர குடிநீர் அருந்தி அதன் பலனை அறிந்துள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொருவரின் உடலிலும் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா பரவல் கடுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பும் தமிழக்ததில் பெருமளவு குறைந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுவதால் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக முன்னேற்றம் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாகும். அதனால்தான் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது.
தற்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனாலும் ஒவ்வொரு இடங்களிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.