மும்பை
மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இந்த பாதிப்பு இருந்தாலும் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக மும்பை நகரில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
கடந்த சில நாட்களாக மும்பையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. குறிப்பாகக் கடந்த 20 நாட்களில் அதிக பட்சமாக ஜனவரி மாதம் பாதிப்பு இருந்த நிலையில் அது தற்போது குறைந்து வருவது மும்பை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி அன்று மும்பையில் 204 பேர் பாதிக்கப்பட்டனர். அது சிறிது சிறிதாக அதிகரித்து ஜனவரி 7 ஆம் தேதி 20,374 ஆனது. இந்த காலகட்டத்தில் இது ஒரு உச்சமாகும். பிறகு அது சிறிது சிறிதாகக் குறைந்து இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,647 ஆகி உள்ளது.
இதைப் போல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தற்போது மும்பையில் மொத்தமுள்ள கொரோனா படுக்கைகளில் 19.9% பேர் மட்டுமே உள்ளனர். இதைப் போல் சோதனையில் உறுதி ஆவோரின் சதவிகிதமும் 18.7% ஆக குறைந்துள்ளது.