பெங்களூரு:
சென்னையில் இருந்து கர்நாடகம் வந்தவர்களால்தான் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள  எடியூரப்பா, சென்னை  மற்றும் டெல்லியிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருபவர்கள் 3 நாட்கள் அரசு முகாம்களிலும், 11 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுவர் என  அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றன. தமிழகத்திலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்திலும்,  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்று கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு என்றே பேச்சே கிடையாது என்றவர், பெங்களூரில் கண்டறியப்பட்டுள்ள  சுமார் 30% கேஸ்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் தமிழகம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து பெங்களூரு வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனால், கர்நாடக அரசு  தமிழகத்துக்கான விதிமுறையை மாற்றியுள்ளது.
இனிமேல், தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருவோர் மூன்று நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகுதான் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று  தெரிவித்து உள்ளார்.