சென்னை:

கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில்  தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மதுரை மீனாட்சி, பழனி முருகன் கோவில் வரும் பக்தர்கள் முகக்கவசம் அணி வலியுறுத்தப்பட்டு உள்ளது.

லக நாடுகளை ஆட்கொண்டு வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், திருப்பதி, பழனி உள்பட பல கோவில் நிர்வாகங்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

கோரோனா பாதிப்பு காரணமாக  தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு முக  கவசம் அவசியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து முக்கிய கோவில்களிலும் நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்க பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையாக கருதப்படும் பழனி தண்டாயுதபானி சுவாமி கோவிலிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மார்ச் 30 ஆம் தேதி வரை பழனி கோவிலில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரம் துவங்க உள்ளது. இவ்விழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கையாக இருமல் ,சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதையும், திருவிழாவில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் ரோப்கார் நிலையம், விஞ்சு நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை முகாம்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பழனி கோவில் நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் என் நடராஜன் கூறுகையில், வேகமாக பரவி வரும் கோவிட் -19 க்கு எதிராக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட மற்றும் சோர்வு, மூச்சுத் திணறல், காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோயில் ஊழியர்கள் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்ட எவரையும் அவர்கள் கோயிலால் வழங்கப்பட வேண்டிய முகமூடியை அணியச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் பக்தர்கள் அதிகமாக வரும் முக்கிய திருத்தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறைத் தீவிரப்படுத்தி உள்ளது.