மதுரை:
மதுரையில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால், மாவட்டத்தில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிர மடைந்து வருகிறது. தற்போது வரை 3423 பேர் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 967 பேர் சிகிச்சை குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் மேலும், 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,703-ஆக உயர்ர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, ஜூலை 6ந்தேதி (நாளை மறுதினம்) முதல் வரும் 12ந் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதி மற்றும் பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைந்து, 6 ந்தேதி முதல் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.