டில்லி

கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும்.  இம்மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி 3678 பேர்  சோதிக்கப்பட்டதில் 28 பேருக்கு கொரோனா உள்ளது உறுதி ஆனது.  அன்று முதல் அம்மாவட்டம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு முடக்கப்பட்டு யாரும் கொரோனா உள்ள பகுதிக்குள் நுழைய விடாமல் தடை செய்யப்பட்டது    அனைத்து மக்களும் சோதிக்கப்பட்டனர்.   சோதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 1315 பேர் தனிமைப்படுத்தப் பட்டனர்

மேலும் அவர்கள் வீட்டு முன்பு காவலர்கள் நிறுத்தப்பட்டு வெளியே வருவது தடை செய்யப்பட்டு அந்த பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.  மக்களுக்குத் தேவையான பால், உணவுப் பொருட்கள், மருந்து என எல்லாவற்றையும் மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக வழங்கியது.    இந்த நடவடிக்கைகள் மூலம் புதிய கொரோனா தொற்று அடியோடு நிறுத்தப்பட்டு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டம் ஆகி உள்ளது.

பில்வாரா மாடல் என அழைக்கப்படும் இந்த நடவடிக்கைகளை இந்தியா தூதர் அஜய் பிசாரியா கனடா நாட்டுடன் பகிருந்துளார்.  அத்துடன் 50 லட்சம் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்ப உள்ளது.  இது குறித்து அஜய் பிசாரியா, “கனடா நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு உள்ளது.  இரு நாட்டுப் பிரதமர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள், வர்த்தக அமைச்சர்கள் அவரவர் துறையில் இரு நாடுகளுக்கிடையே ஒற்றுமைக்காகக் கலந்தாலோசித்து வருகின்றனர்.

கொரோனா பரவுதலைத் தடுக்க இந்தியா 50 லட்சம் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்ப உள்ளது.  அத்துடன் நமது நாட்டில் கொரோனா தடுப்பில் புகழ்பெற்ற பில்வாரா மாடலை கனடா நாட்டுடன் பகிர்ந்துள்ளோம்.  அதற்குப் பதிலாகக் கனடா நமக்கு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் செய்யும் முறைகளைப் பகிர உள்ளது.  இது குறித்து  நான் ஏற்கனவே கனடா அமைச்சர்களுடன் உரையாடி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.