டில்லி
இன்று மதியம் வரை இந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிப்பு12380 ஆகி அதில் 414 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவில் தேசிய ஊரடங்கு காலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11439 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் கிடைத்த தகவலின்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,380 ஆகி உள்ளது. மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 414 ஆகி உள்ளது.
பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1242, தமிழ்நாட்டில், 1242 மற்றும் ராஜஸ்தானில் 1101 பேர் உள்ளனர். மொத்தம் 1489 பேர் குணம் அடைந்துள்ளனர். கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்துள்ளது. நேற்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
நாடெங்கும் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் இந்த அறிவிப்பில் உள்ளன. இம்மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக 207 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா சோதனை குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் ஆர் ஆர் கங்காகேதர், “துரித சோதனை கருவிகள் பாதிப்பு கண்டறிவதை விடப் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு அவசியத் தேவையாகும். இந்தியாவில் மொத்தம் இரண்டு விதமான சோதனை கருவிகள் வந்துள்ளன. அவற்றின் எண்ணிக்கை 5 லட்சம் ஆகும். அவை 80% துல்லியமாக முடிவுகளை அறிவிக்கக் கூடியவை” எனத் தெரிவித்துள்ளார்.