சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த 2 மாதமாக து குறைந்து வந்தது. கட்டுபாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு வாரமாக மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதனால்,  முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை யில், வடமாநிலங்களில் இருந்து சென்னை ஐஐடிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் 3 மாணவிகளுக்கு மட்டுமே கொரோனா உறுதியான நிலையில், அங்கிருக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதில், நேற்று 30 பேருக்கு உறுதியான நிலையில், இன்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்ததுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.டி வளாகத்தில் ஆய்வு செய்தார். கொரோனாபாதிக்கப்பட்டவர்களை தனிஅறையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான அளவு பாதிப்பு தான். சிறிய அளவில் தொண்டை எரிச்சில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். எந்தவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது 2 வாரங்களுக்கு பிறகே தெரியவரும்.

தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை. இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது. கொரோனா குறித்து மக்கள் பதற்றம் அடையும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்றும்  கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது என்றும் கூறினார்.