சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வார்டுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் விவரம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால்தான் கொரோனாவின் அடுத்த அலையை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும்.
தமிழ்நாட்டில் தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனா குறித்து பீதி அடையாமல், அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.