டில்லி
குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் பள்ளிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆரம்பப் பள்ளிகள் உள்ளிட்ட பல பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ஐ சி எம் ஆர்) ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சுமார் 40 கோடி பேருக்கு கொரோனா தாக்குதல் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இவர்களில் மூன்றில் இரு பங்கு ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆவார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
எனவே பெரியவர்களை விடக் குழந்தைகளால் கொரோனா பரவல் தடுப்பை சரிவரக் கையாள முடியும் என்பது அவர்களிடம் அதிக அளவில் உள்ள கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதையொட்டி ஒரு சில நாடுகளில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை உயர்நிலைப் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு ஆரம்ப பள்ளிகள் திறப்பதை முடிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள ஆசிரியர், பேருந்து ஓட்டுநர் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.