திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால்,  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம்பண்டிகை உள்பட பல்வேறு பண்டிகைகளுக்கு முழுமையான தளர்வுகளை கேரள அரசு அறிவித்ததால், அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் புதியதாக 24, 296 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது. அதுபோல,  173  பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை  38,51,984 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  19757 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3672357 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது,  159355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறதுழ.  தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர்  பினராயி விஜயன் கூறுகையில், ‘கேரளாவில் கோவிட் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்று கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.