பெர்லின்
கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதில் ஜெர்மனியும் ஒன்றாகும். நேற்று வரை ஜெர்மனியில் 26.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 76000 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 24.33 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 1.8 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் ஜெர்மனியில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றும் அதிக அளவில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க ஜெர்மனி அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஜெர்மனியில் மார்ச் 28 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 ஆம் தேதிக்குப் பிறகு அங்கு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் ஊரடங்கை மேலும் நீட்டித்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் அறிவிப்பின் படி வரும் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக விடுமுறை நாட்களான 5 நாட்களில் தீவிர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.