சென்னை:
ண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அது புதிய வகை கொரோனாவா என அறிய, இவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 21-ந்தேதி மதியம் முதல் இங்கிலாந்து நாட்டுக்கு விமான சேவை தடை செய்யப்பட்டது. அந்தவகையில் ஏற்கனவே லண்டனில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் லண்டனில் இருந்து வந்த மேலும் 4 பேருக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நவம்பர் 25-ந்தேதியில் இருந்து டிசம்பர் 21-ந்தேதி வரை லண்டனில் இருந்து வந்த 2,805 பேரை கணக்கெடுத்து, அதில் இரு இடங்களில் பதிவு செய்து வைத்திருந்த 415 பேரை கழித்து, 2,390 பேரை கண்டுபிடித்துள்ளோம்.

இவர்களில் 1,126 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில், சென்னையில் 1,034 பேர், செங்கல்பட்டில் 234 பேர், காஞ்சீபுரத்தில் 202 பேர், கோவையில் 110 பேர், திருச்சியில் 107 பேர், மதுரையில் 88 பேர், தஞ்சாவூரில் 72 பேர், திருவள்ளூரில் 71 பேர், திருவாரூரில் 38 பேர், நாகப்பட்டினத்தில் 39 பேர், கடலூரில் 36 பேர், நெல்லையில் 34 பேர் மற்றும் இன்னும் சில மாவட்டங்களுக்கு வருகை தந்த நபர்கள் என இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 390 பேரில், 1,126 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், நேற்று முன்தினம் வரை 444 பேரின் முடிவுகள் வந்தது. அந்தவகையில், நவம்பர் 28-ந்தேதி தமிழகம் வந்த ஒரு நபர் மதுரையிலும், டிசம்பர் 16-ந்தேதி வந்த 2 நபர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரிலும், 17-ந்தேதி சென்னை முகப்பேர் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 682 பேரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். மேலும், பரிசோதனை செய்யப்படாத 1,265 பேர் கண்டறியப்பட்டு படிப்படியாக பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதலில் கொரோனா பாதிப்பு உறுதியான மாணவருடன் தொடர்பில் இருந்த 15 நபர்களை பரிசோதித்ததில் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரின் தொடர்புகளையும் கண்காணித்து வருகிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 4 பேருக்கும் எந்த அறிகுறியும் இல்லை.

இவர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் இருக்கிறதா? என்பதை கண்டறிய இவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகே அந்த வைரசின் தன்மை குறித்து நமக்கு தெரியவரும். மேலும், புனேவுக்கு அனுப்பப்பட்ட மாணவரின் பரிசோதனை முடிவும் ஓரிரு நாட்களில் வரும்.

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு, தமிழகத்தில் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதனால் யாரும் பீதியடைய தேவையில்லை.

கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், கொரோனாவை குறைத்து விடலாம். முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் பொது மக்களிடையே ஒத்துழைப்பு குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.