மும்பையின் செம்பூர் பகுதியில் வசித்தவர் விநாயக் ஜாதவ் என்ற 80 வயது முதியவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு, மே மாதம் 12ம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆரம்பகட்ட பரிசோதனைக்குப் பிறகு, அவரின் மகன் விரேன், அருகிலுள்ள போவாயின் எல் எச் ஹிராநந்தனி மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றார்.
ஆனால், அந்த தனியார் மருத்துவமனை, அம்முதியவரை அனுமதிக்க மறுத்ததோடு, கொரோனா பரிசோதனைக்கு வற்புறுத்தியது. அந்த சமயத்தில் அம்முதியவரின் நிலை மேலும் மோசமடைந்திருந்தது. இந்நிலையில், பரிசோதனையில் பாசிடிவ் என்று வர, அனுமதிக்க படுக்கை இல்லை என்று கைவிரித்துவிட்டது அம்மருத்துவமனை.
இதனையடுத்து, செவன் ஹில்ஸ் பகுதியிலிருந்த ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வினாயக் ஜாதவ். இறுதியில், மே மாதம் 15ம் தேதி அவர் மரணமடைந்தார்.
மற்றொரு கதை 35 வயதான ஷெரீப் அகமது என்பவருடையது. இயந்திர தொழிலாளியான அவர் கிழக்கு மும்பைப் பகுதியில் வசித்து வருகிறார். உடல்நிலை மோசமான காரணத்தால் மே 30ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மாநகர மருத்துவ ஊழியர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால், யாரும் வராமல் போகவே, அவர் இறக்க வேண்டியதானது.
அவர் வாழ்ந்தது ஒரு நெருக்கடியான குடிசைப் பகுதி. மே 29ம் தேதியே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவக் குழு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அவர் ஏற்கனவே பரிசோதனைக்கு உட்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சம்பவங்களும், இந்நாட்டின் மருத்துவ அமைப்பு தோல்வியடைந்துவிட்டதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
கொரோனா தொற்று சிகிச்சைகளுக்காக, மத்திய அரசின் சார்பில் ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டினுடைய வலுவற்ற சுகாதார கட்டமைப்பு, பெருகிவரும் கொரோனா நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இந்த நேரத்தில், தனியார் மருத்துவத்துறை மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதை நாம் காண்கிறோம். அதாவது, இந்த சமூகத்தின் பாலான அதன் பொறுப்பற்ற தன்மையும், அதன் சமூக அக்கறை லட்சணமும் சந்தி சிரிக்கிறது.
காய்ச்சல் என்று வந்தாலே, யாரையும் பார்க்க மறுக்கின்றன தனியார் மருத்துவமனைகள். மேலும், அப்படியே கொரோனா சிகிச்சையளித்தாலும், அதற்காக அவை வசூலிக்கும் கட்டணங்கள் மிக அதிகம். எனவே, பெரும் பணக்கார நபர்கள்தான் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப்பெற முடியும் என்ற நிலை.
மருத்துவமனை படுக்கைகளில், மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருந்தாலும், வெண்டிலேட்டர்களில் 80% ஐக் கொண்டிருந்தாலும், தனியார் மருத்துவமனைகள் கிசிச்சைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே.
இந்தியாவில், தனியார் மருத்துவத்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு 280 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, ஒட்டுமொத்த மருத்துவ செலவில் இது 74%. ஆனால், அடிப்படை சுகாதார சேவைகளுக்கானவை அல்ல இந்த தனியார் மருத்துவத் துறை. மாறாக, 5 நட்சத்திர வசதியுள்ள இவை, காப்பீடு வசதி கொண்ட நோயாளிகளையே கையாள்கின்றன. அவை, பெரும்பாலும் கவனம் எடுத்துக்கொள்வது வாழ்க்கைமுறை சார்ந்து ஏற்படும் நோய்களைத்தான். இந்த மோசமான நிலை, நமது பெரும் தோல்வியை பறைசாற்றுகிறது.
நமது நாட்டின் 737 அரசு மற்றும் 279 தனியார் ஆய்வகங்களின் மூலம் 1000 பேருக்கு 5.5 நபர்களையே பரிசோதனைக்கு உட்படுத்த முடிகிறது. ஆனால், இதே கணக்கில், ரஷ்யாவில் 124 பேரும், இத்தாலியில் 85 பேரும், அமெரிக்காவில் 86 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் சுகாதாரத்திற்கென்று ஒதுக்கப்படும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% மட்டுமே. உலகிலேயே மிகக்குறைந்த அளவாக இது இருக்கலாம். 2020-21 பட்ஜெட்டில், வெறும் 5.7% மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.63,830 கோடியிலிருந்து, ரூ.67,484 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்குவது 16.9%. பிரான்சும் ஜெர்மனியும் 11.2% ஐ செலவு செய்கின்றன. இத்தாலி 8.8% அளவும், துருக்கி 4.2% அளவும் ஒதுக்கீடு செய்கின்றன.
இந்தியாவில் அறிவிக்கப்படும் மருத்துவம் சார் திட்டங்கள் பலவும் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விடுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். இதில், காசநோய் ஒழிப்பு, சர்வதேச தரத்திலான மருத்துவ வசதி, 112 மாவட்டங்களில் நவீன மாதிரி மருத்துவமனைகள், ஜனா அவுஷாதி கடைகள் மூலம் சாதாரண மனிதர்களுக்கு 2000 மருந்துகள் வரை எப்போதுமே கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இத்திட்டத்தின் வாயிலான வெளியிடப்பட்டன. ஆனால், நடைமுறையில் தோல்வியே!
இந்தியாவில் நிகழும் மருத்துவம் சார்ந்த செலவினங்களில், மூன்றில் இருபங்கு மக்களின் பையிலிருந்தே செலவாகிறது. ஆனால், உலக சராசரி 18.2% மட்டுமே. இந்த நிலையால், நாட்டின் கணிசமான மக்கள்(63 மில்லியன்), மருத்துவ செலவினங்கள் காரணமாகவே வறுமையில் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, இந்தியாவில், சுகாதாரத் துறைக்கென்று அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான், இப்போதைய தொற்றுநோய் காலமானாலும் சரி, இதர வழக்கமான காலகட்டமாக இருந்தாலும் சரி, வெகுமக்களை சரியான முறையில் பாதுகாக்க முடியும்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்