ண்டன்

கொரோனா மரணங்கள் குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் எனவும் தடுப்பூசிகள் அல்ல எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிகரித்த நாடுகளில் இங்கிலாந்து நாட்டிலும் அதன் தாக்கம் அதிகரித்தது.   இந்த வருடத் தொடக்கத்தில் இந்த அதிகரிப்பு காணப்பட்டதில் இருந்தே அந்நாட்டில் கடுமையான ஊரடங்கு அமலானது.  முக்கிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்றவை அனைத்தும் அடைக்கப்பட்டன.

நாட்டில் மக்கள் அவசியத் தேவைக்காக மட்டுமின்றி வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது.    அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.  இதுவரை 3.2 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 74 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் தினசரி மரணம் அடைவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.    அரசு இதையொட்டி நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளது.  தற்போது கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கி உள்ளன.  அத்துடன் இரவு நேர விடுதிகள், மதுபான விடுதிகள், முடிதிருத்தும் கடைகள், உணவு விடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு விதிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ”பொது மக்களுக்கு தற்போதைய ஊரடங்கு தளர்வு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்,  ஆனால் தினசரி மரணம் அடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது ஊரடங்கால் மட்டுமே அன்றி தடுப்பூசிகளால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அனைவரும் மிகவும் பொறுப்புடன் நடந்து முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்” என அறிவித்துள்ளார்.