சென்னை: மாநில தலைநகர் சென்னையில், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வண்ணாரப்பேட்டையில் ஒரு தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,67,376 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,52,846 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3210 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 11,.320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னையில் தொற்று பரவல் ஆயிரத்துக்கும் குறைவாக தெரிய வந்த நிலையில், தற்போது அளிக்கப்பட்டு வரும் தளர்வுகள் காரணமாக தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் 1200 ஆக உயர்ந்துள்ளது. திடீரென தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு காரணமாக ஒரு தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பண்டலை சாலையில் உள்ள ஒரே குடியிருப்பில், 11 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட தெரு மூடப்பட்டது. அந்த குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும், ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள் உட்பட, 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில், மாநகராட்சி ஊழியர்கள், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட, தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பண்டலை தெரு முழுதும், தகரத்தால் அடைத்து, கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்தனர்
ராயபுரம் மண்டல சுகாதார அதிகாரிகள், 11 பேரையும், புளியந்தோப்பில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக எந்தவொரு வீட்டிலும் தகரம் அடைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தெருவே சீல் வைக்கப்பட்டு, கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருவது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.