பாட்னா

கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிக அளவில் பரவி  வருகிறது.   கொரோனா பாதிப்பில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது.   இந்தியாவில் இதுவரை  சுமார் 2.98 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.   பல உலக நாடுகள் கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளன.

இந்நிலையில் பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டம் பெட்டியா நகரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முராத் அலி என்பவர் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவில் கொரோனா வைரஸ் இவ்வளவு பரவியதற்குச் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது    இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வரும் 16ஆம் தேதி விசாரணை தொடங்க உள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் முராத் அலி, “கொரோனா வைரஸை உலகெங்கும் பரப்பச் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் உள்ளிட்டோர் சதி செய்துள்ளனர். இதனால் நான் இவர்கள் மீது  வழக்கு தொடர்ந்துள்ளேன்.  இந்த வழக்கில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சாட்சிகளாக இணைத்துள்ளேன்.   இந்த வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

எனவே நான் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்துள்ளேன். எனது வழக்குக்கு ஆதாரங்களாக நான் சமூக, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்திகள், உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் ஆகியவற்றை அளித்துள்ளேன்.  இந்த வழக்கு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே பல உலக நாடுகள் கொரோனா விவகாரத்தில் சீனா மீது குற்றச்சாட்டுகளை வைத்து அந்நாடு அதிபரை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்துள்ளன.  தற்போது பீகார் நீதிமன்றத்தில் இத்தகைய வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.