ஐதராபாத்
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்தொற்று தற்போது உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் சுமார் 1 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ள்ளனர். சுமார் 3200க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ள போதிலும் உலகின் பல நாடுகளில் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு சில பிரபலங்கள் அதிகார வரம்பை ஒட்டி சோதனைகளுக்கு உட்படாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன பொதுவாகப் பிரபலங்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பாததே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
தெலுங்கானா மாநிலத்துக்குச் சீனா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்குச் சோதனை நடத்தப்பட்டு அறிகுறிகள் இருந்தால் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் மாநில அரசு சில தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டு அமைத்து கொரோனா வைரஸ் சோதனை மற்றும் சிகிச்சை செய்ய அனுமதி அளித்துள்ளது/
இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகரின் குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பிரபலங்கள் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று திரும்பி உள்ளனர். சுகாதார அதிகாரிகள் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று அந்த இருவரிடம் இருந்து இரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர். இந்த மாதிரிகள் தற்போது காந்தி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சோதனைச் சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “சுகாதார அதிகாரிகள் பிரபலத்தின் வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுத்துள்ளனர். அதற்குச் சுகாதார அதிகாரிகள் ஏன அனுப்பப்பட்டுள்ளனர்? அனைவரும் தானாகவே வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும் என்னும் நிலை இருக்க அந்த சோதனைக்கு உட்பட சிலர் மறுப்பது ஏன்?
சொல்லப் போனால் இந்த இருவரால் அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அந்த இருவரையும் தனிமை வார்டில் தங்க வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இருவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் யாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்ப வாய்ப்பு இருந்தது. அதை அதிகாரிகள் தவற விட்டுள்ளனர். எனவே இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்த விதிகள் மாற்றப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளனர்