ஒரு முறை பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர், கொரோனா வைரஸ் இரண்டாம் முறை தாக்குமா? ஒரு சிலர் மட்டும் ஏன் மற்றவர்களை விட அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? ஒவ்வொரு குளிர்காலத்திலும் வைரஸ் தாக்குதல் ஏற்படுமா? கொரோனாவிர்க்கு எதிராக ஒரு தடுப்பு மருந்து வேலை செய்யுமா? நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நாம் இயல்புநிலைக்கு திரும்ப முடியுமா? நீண்டகால நிவாரணத்திற்கு என்ன செய்வது?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் நோயெதிர்ப்பு என்பதே மையப்படுத்தப்பட்ட ஒரே பதிலாக உள்ளது. ஆனால், கொரோனா பிரச்சனையைப் பற்றி மிகக் குறைந்த அளவே நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பது ஒரு மிகப்பெரிய குறையாக உள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பெறுவது?
நமது உடலின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு என்பது இரண்டு வகைப்படும்.
தன்னிச்சையான அல்லது இயற்கை நோயெதிர்ப்பு சக்தி
ஒன்று, தன்னிச்சையான அல்லது இயற்கை நோயெதிர்ப்பு – நமது உடலை சேராத எந்த ஒரு வெளிப்புறத்தில் இருந்து நமது உடலுக்குள் நுழையும் அல்லது நுழைய முற்படும் கிருமி/ வேதிப்பொருள் அல்லது வேறு எவ்விதமனவற்றுக்கும் எதிராக செயல்பட்டு அந்த உயிரியைக் கொல்ல அல்லது நச்சு நீக்கும் தன்மைக் கொண்ட கிருமி எதிர்ப்பு வேதிப்பொருட்களை வெளிப்படுத்தி கிருமிக்கு எதிரான வினைகளைத் தூண்டி அதன் மூலம் நிவாரணமளிக்கும் செல்கள் மற்றும், உடலுக்குள் தொற்றும் கிருமிகளுடன் நேரிடையாக இணைந்து அந்த கிருமியைக் கொல்லும் தன்மையுடைய செல்கள் என இரண்டு வகையான இரத்த வெள்ளை செல்களால் ஆனது. இது ஒரு உடனடி நிவாரணமளிக்கும் நோயெதிர்ப்பு பண்பு ஆகும். ஆனால், இது அனைத்து கிருமிகளுக்கும் எதிரான ஒரு பொதுவான பாதுகாப்பு செயல்பாடு ஆகும். கொரோனா வைரஸுக்கு எதிராகவும் செயல்படும். ஆனால் கொரோனாவிற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்காது.
உண்டாக்கப்பட்ட அல்லது தகவமைக்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி
இரண்டாவதாக, நமது உடலில் ஒரு குறிப்பிட்ட கிருமி அல்லது நோய்க்கு எதிராக நிரந்தர நோயெதிர்ப்பு சக்தியைப் பெற அது உண்டாக்கப்பட வேண்டும். அந்த நோய் காரணிக்கு எதிராக நமது உடலை தகவமைக்க வேண்டும். எனவே இவ்வகை நோயெதிர்ப்பு சக்தி உண்டாக்கப்பட்ட அல்லது தகவமைக்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை நோய் எதிர்ப்பு செயல்பாட்டில், ஏதேனும் ஒரு நோய்காரணி நமது உடலுக்கும் நுழையும்போது, B செல்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை இரத்த வெள்ளை செல்கள் ஆன்டிபாடி – Antibody எனப்படும் ஒரு வகை புரதத்தை உருவாக்குகிறது. இந்த புரதம் கிருமிகளின் மீது ஒட்டிக் கொண்டு சில வேதி வினைகளின் மூலம் அந்தக் கிருமியைக் கொல்லும். இந்த புரதம் அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிராக மட்டுமே குறிப்பாக செயல்படும் தன்மைக் கொண்டது. தற்போது கொல்லப்பட்ட அந்தக் கிருமி மீண்டும் எப்பொழுது நம்மை தாக்க முற்பட்டாலும், இந்த புரதங்கள் மீண்டும் உருவாகி செயல்படும்.
இதே போல, மற்றொரு வகை வெள்ளை செல்கள் நேரிடையாக கிருமிகளை தாக்கி கொல்லும் தன்மைக் கொண்டது. ஆனால் இது உண்டாக்கப்படுவது என்பதால், முழுமையடைய 10 நாட்கள் வரை ஆகலாம் என்றாலும், இதில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலிமையானதும், எதிர்கால நோயெதிர்ப்பு பாதுகாப்பும் கொண்டது ஆகும். அதாவது இந்தவகை நோயெதிர்ப்பு செயலானது, ஒவ்வொரு முறை உள்நுழையும் கிருமிகளின் கட்டமைப்பை தன் நினைவகத்தில் சேமித்து வைத்து, அதே கிருமி மீண்டும் தாக்குமானால் அதை அடையாளம் கண்டுக் கொள்ளும் திறமை வாய்ந்தது. ஆனால், குறைந்த அளவிலான அறிகுறிகள் அல்லது அறிகுறியற்ற கிருமி தாக்குதலுக்கு இது பொருந்துமா என்பதை உறுதியிட்டுக் கூற முடியாது.
நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்?
நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் நினைவகம் என்பது மனிதர்களின் நினைவைப் போன்றதே ஆகும். சில கிருமி தொற்றுகளை வாழ்நாள் முழுவதும் நினைவுப்படுத்திக் கொள்ளும். அதே சமயம் சில தொற்றுகள் மறக்கப்பட்டு விடும். உதாரணமாக, தட்டம்மை தடுப்பு மருந்து (MMR Vaccine) உருவாக்கும் நினைவகம் நமது வாழ்நாள் முழுமைக்கானது. அதேசமயம் சாதாரண சளி ஒரே மாதத்தில் நமக்கு பலமுறை வருகிற அளவிற்கு அதன் நினைவகத்தின் ஆயுள் சில நாட்களே ஆகும்.
தற்போதைய புதிய கொரோனா வைரஸ், உருவாக்கவுள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தின் நினைவகம் எப்படிப்பட்டதென நம்மால் தற்போது அறிய முடியவில்லை. ஆனால் மனித குலம் இது வரை சார்ஸ் உள்ளிட்ட ஆறு வகையான கொரோனா குடும்ப வைரஸ்களை கண்டுள்ளது. எனவே இதைப் பற்றி நம்மால் மேலும் அறிய முடியும். நம் கண்ட ஆறு வைரஸ்களில், நான்கு சாதாரண சளி போன்ற அறிகுறிகளையே உருவாக்குகின்றன. மேலும் இரண்டு (SARS and MERS) சுவாசக் குறைபாடுகளை உண்டாக்கும் கடுமையான நோய்களை உருவாக்கவல்லவை. இதுவரை நடந்த ஆய்வுகளில் இருந்து SARS மற்றும் MERS வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு புரதங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே மனிதர்களின் உடலில் தோன்றியது. இதிலிருந்து இந்த வைரஸ்கள் உருவாக்கும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் வாழ்நாள் முளுமைக்குமானது அல்ல என்ற யூகத்தை உருவாக்கியுள்ளது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான பால் ஹண்டர் இதைப்பற்றி கூறும்போது,,” இங்கே ஒரு நோயாளி நோயெதிர்ப்பு சக்தியை பெறுகிறாரா இல்லையா என்பது நமது கவலை அல்ல. ஆனால் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்காது,” என்றார். சார்ஸ் உருவாக்கிய ஆன்டிபாடி ஆய்வுகளின் அடிப்படையில், நோய் எதிர்ப்பு சக்தி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும், இரண்டாம் முறை வரும் தொற்று முதன்முறையானதைப் போல கடுமையானதாக இருக்காது,” என்றும் கூறினார்.
இரண்டாம் முறை கொரோனா தொற்று
மக்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் மீண்டும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. சிலர் உண்மையிலேயே இரண்டாம் முறை பாதிக்கப்பட்டதாக சிலர் அறிவித்துள்ளனர். ஒரு முறை வெளிப்பட்ட வைரஸ், மனித உடலுக்குள் மீண்டும் வெளிப்படும் முன் குறுகிய அல்லது குறிப்பிட்ட காலம் செயலிழந்த நிலைக்கு செல்லும். இருப்பினும், விஞ்ஞானரீதியான ஒருமித்த கருத்து என்னவெனில், நோயாளிகளுக்கு தவறான முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பதே ஆகும். வைரஸ் குணமடையாதவர்களையும் குணமடைந்தவர்களாக அறிவித்து வீட்டிற்கு அனுப்பபடுகின்றனர். அதனால், பாதிப்பு வெளிப்படும்போது அது இரண்டாவது முறை ஏற்பட்ட தொற்றாக பதிவு செய்யப்படுகிறது என்பதே ஆகும். இதுவரை எந்த மனிதர்களுக்கும், நோயெதிர்ப்பு திறனை சோதிக்கும் பொருட்டு இரண்டாவது முறை வேண்டுமென்றே தொற்றை ஏற்படுத்தவில்லை. சில ரீசஸ் வகை குரங்குகளுக்கு சில முறை இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் தொற்று முழுமையான குணப்படுத்தப்பட்ட இந்த வகை குரங்குகளுக்கு மூன்று வாரங்கள் கழித்து இரண்டாம் முறை தொற்று உருவாக்கப்பட்டதில், அக்குரங்குகள் எவ்வித அறிகுறிகள் மற்றும் வைரஸ் பாதிப்பை உருவாக்கவில்லை.
வைரஸ் எதிர்ப்பு புரதங்கள் (Antibody) தான் நோயெதிர்ப்பு சக்தியா?
மேற்கண்ட கேள்விக்கு இதுவரை உத்திவாதமளிக்கப்பட்ட பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அதனால் தான் நோயெதிர்ப்பு சக்தி என்ற வாதத்தை பயன்படுத்தி, ஊரடங்கினை தளர்த்த தயாராகும் நாடுகளைப் பற்றி உலக சுகாதார நிறுவனம் மிகுந்த கவலை தெரிவிக்கிறது. ஒருவர் ஆன்டிபாடி – Antibody சோதனையில் வெற்றி பெற்றால், அவர் வெளியே செல்வதற்கு அல்லது வேலைக்கு செல்ல தகுதி பெற்றவர் ஆகிறார். இந்த வாதம் சேவை மையங்கள், மருத்துவமனை போன்ற நோயாளிகளுடன் நேரடி தொடர்புக் கொள்ளும் வாய்ப்புள்ள பணியாளர்களுக்குப் பொருந்தும். ஆனால் அனைத்து ஆன்டிபாடிகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. கொரோனா வைரஸுடன் ஒட்டிக் கொண்டு அதனைக் கொல்லும் திறன் பெற்றது மட்டுமே உண்மையான நோயெதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.
சீனாவில் குணமடைந்த 175 நோயாளிகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், 30% பேர் மட்டுமே மேற்குறிப்பிட்ட கொல்லும் திறன் கொண்ட ஆன்டிபாடிகளை பெற்றிருந்தனர். எனவே, உலக சுகாதார அமைப்பு அனைவருக்கும் கூற விரும்பும் தகவல் என்னவெனில், வைரஸ் எதிர்ப்பு புரதங்களால் நீங்கள் பாதுகாக்கபடுகிறீர்கள் என்பதற்கு, நீங்கள் மீண்டும் வைரஸ் தொற்றை பெறமாட்டீர்கள் என்பதோ, உங்களிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவாது என்பதோ பொருள் அல்ல. அதற்கு பதிலாக நோயெதிர்ப்பு செல்கள் செயல்படுகிறன என்பதாகவும் இருக்கலாம்” என்பதே ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஏன் முக்கியமானது?
இதற்க்கு பதில் மிகவும் வெளிப்படையானது மற்றும் முக்கியமானது. நமது சொந்த ஆரோக்கியம் மற்றும் உடல் நலனுடன் தொடர்புடையது என்பதே ஆகும். கொரோனா வைரஸால் மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா, ஆம் எனில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு? அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையாக இருக்கும் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வல்லமை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியின் வலிமைக்கே உள்ளது. நாம் பெறும் நோயெதிர்ப்பு சக்தி முழுமையானதாக இல்லை எனினும், இரண்டாம் முறை ஏற்படும் நோய் தொற்றின் கடுமையை அது குறைக்குமானால் அதுவே பெரும் அளவில் உதவிகரமாக இருக்கும். மேலும் நோயெதிர்ப்பு சக்தியினைப் பற்றி நாம் முழுமையாக அறிந்தால், ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை தளர்த்துவது பற்றியும் தெளிவான திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
அறிவியல் ரீதியாகவும் பல அம்சங்களில் இந்த நோயெதிர்ப்பு சக்தி பற்றிய தகவல்கள் நமக்கு உதவி செய்யும். தடுப்பு மருந்து கண்டறிதல், அதன் வீரியம், வாழ்நாள் முழுமைக்கும் வைரஸை கட்டுப்படுத்துமா அல்லது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்குவிப்பு டோஸ் போடப்பட வேண்டுமா என பல பதிலில்லாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமென்பதுடன், மேலதிக ஆய்வுகளுக்கு திட்டமிடல்களை மேற்கொள்ளவும் இந்தத் தகவல்கள் உதவிகரமாக இருக்கும் என்றால் மிகையாகாது. வைரஸை வெல்வோம் அனைவரையும் காப்போம்!!!
English: James Gallagher
தமிழ்: லயா